பாணந்துறை, வலான, மகாநாம வீதிப் பகுதியில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் மினுவன்பிட்டிய மயானத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (29) இரவு சுமார் 10 மணியளவில், குறித்த வர்த்தகர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் காரில் வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேறொரு காரில் வந்த குழுவினர், வர்த்தகரின் காரை பின்தொடர்ந்து சென்று தாக்கியதுடன், வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து அவரை கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது வர்த்தகரின் இரு மகள்களுக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், காயமடைந்த அவரது மனைவி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட வர்த்தகரும் பின்னர் மீட்கப்பட்டு, காயங்களுக்காக அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பணத்தகராறு காரணமாக இந்தக் கடத்தல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவத்தில் வர்த்தகரின் காருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
